Tuesday, November 25, 2008
தாளையடியில் வள்ளம் எடுத்து
பல்லவி
தாளையடியில் வள்ளம் எடுத்து
தாய்நாட்டை விட்டுப் போகின்றோம்
தமிழ் நாட்டின் கரையைத் தேடி
உயிரைச் சுமந்து போகின்றோம்
நீயொரு வள்ளத்திலே- அடி
நானொரு வள்ளத்திலே
இந்தக் கடலில் கரைந்து போவோமோ
இல்லை கடலைக் கடந்து போவோமோ
சரணம்-1
மேற்கில் சாய்ந்த சூரியன்-நாளை
எங்கள் கண்ணில் விடியலாம்
மேகக் கூந்தல் காற்றில் விரிய
எங்கள் மேனியும் சிலிர்க்கலாம்
எனக்குத் தெரியும் வெண்ணிலவு
அன்பே உனக்கும் தெரியலாம்
எனக்குள் எரியும் காதல் நெருப்பை
கடல் நீரும் குடிக்கலாம்
உப்புக் காற்றின் ஈரம் வந்து
காதில் இனிப்பைச் சொல்லுமோ
அனலில் வீழ்ந்த எங்கள் தேசம்
குளிர்ந்த நிலவாய் மாறுமோ
ஊரை இழந்தோம் உறவை இழந்தோம்
கனவைத் தொலைத்தோமே
கண்ணீர்...கண்ணீர்...கண்ணீர்...
சரணம்-2
வெள்ளி முளைத்து வழிகாட்டும் திசையில்
எங்கள் வள்ளம் போகுதே
கண்களாலே ரசித்த கடலில்
நெடிய பயனம் போகின்றோம்
நீலக் கடலின் எல்லை விரிய
நெஞ்சில் ஏதோ போர்க்களம்
நீரில் மூழ்கும் நிலையில்கூட
நீயும் நானும் ஊர்வலம்
மரணம் கலந்த எங்கள் வாழ்வில்
காதல் கூட பாரமா
தருணம் பார்த்து தடைகள் தாண்ட
காதல் என்ன பாவமா
ஊரை பிரிந்தோம் உறவை இழந்தோம்
கனவைத் தொலைத்தோமே
கண்ணீர்...கண்ணீர்...கண்ணீர்...
வரிகள்: வசீகரன்
குரல்: கிருஷ்ணராஜ்
இசை:வி.எஸ்.உதயா
இறுவட்டு: காதல் மொழி
வெளியீடு: 14.05.2006
Subscribe to:
Comments (Atom)