Thursday, April 26, 2007

எழுது எழுது



எழுது எழுது என் அன்பே - காதல் கடிதம்

பல்லவி

எழுது எழுது என் அன்பே-ஒரு
கடிதம் எழுது என் அன்பே
உன்னை நான் நேசிக்கிறேன்
அதனால் தானே சுவாசிக்கிறேன்

சரணம் 1

பனியில் உறையும் என் விழிகள்-ஒரு
நொடியில் உருகிடும் உனைப்பார்த்து
பாசம் நேசம் தருவாயே-என்பாதை
எங்கும் வருவாயே பார்த்த விழி பூத்திருந்தேன்-என்
பார்வை நீயேன் வரவில்லை ?
அலையாக நீ வந்து அணைப்பாயா-அந்தி
மழையாக என்னை வந்து நனைப்பாயா?

சரணம் 2

மனசில் பூக்கும் என் பூக்கள்- உன்
மாலை ஆகும் வேளை வரும்
பூவின் வாசம் தருவாயே - என்
மேனி எங்கும் சிலிர்ப்பாயே - இங்கு
எனக்காக நீ வந்து கவிபாடு- அங்கு
இருளோடு உனக்கென்ன விளையாட்டு-என்
உயிரோடும் உடலோடும் நீதானே- உன்
உறவாலே எனை வந்த தாலாட்டு

காதல் வாழ்க காதல் வாழ்க
பூமி சுற்றும்வரை காற்று உள்ளவரை
காதல் வாழ்க காதல் வாழ்க

பாடல் : வசீகரன்
குரல் : ஸ்ரீநிவாஸ்
இசை : வி.எஸ்.உதயா
எண் : 01
ஏட்டில் : 20.03.2000

காதல் கடிதம்

Wednesday, April 18, 2007

தமிழனுக்கு உயிர்

வணக்கம் நண்பர்களே!

உங்கள் வரவு நல்வரவாகட்டும். என் தமிழில் நடைபயில எனது இலக்கியப்பூங்கா.

எனது முதலாவது படைப்பான
இன்ரநெற் யுகமும் இருபத்தியோராம் நூற்றாண்டும்
நூலில் இருந்து கவிதைகள் இங்கே மலர்கின்றன. நான் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எழுதத் தொடங்கி இரண்டாயிரம் ஆண்டுவரை எழுதிய பல கவிதைகள் இங்கு இடம்பெற்றுள்ளன.
சிறிய வயதில் கவிதை மீது கொண்ட தீராத காதலால் என் தாயகம் சார்ந்து
எழுதிய என் உணர்வின் பதிவுகள் இவை. அவற்றில் சொற்பிழைகள் பொருட்பிழைகள் இருந்தால் என்னை மன்னித்து பொறுத்தருளுவீர்கள் என நம்புகின்றேன்.

என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பினை மிகவும் அழகாக வடிவமைத்து பதிப்பு செய்தளித்த மறவன்புலவு திரு.சச்சிதானந்தன் ஐயா அவர்களை நன்றியுடன் நினைவு கோருகின்றேன்.
அத்தோடு என் நூலுக்கு அணிந்துரை வழங்கிய இனிய மூத்த படைப்பாளிகள் உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன், கவிஞர் கந்தவனம் ஐயா, கவிஞர் வ.ஐ.ச.செயபாலன் மற்றும்
என் அன்புக்குரிய கவிஞர் சோதியா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

எனது இக் கவிநூலினை வெளியீடு செய்து வைத்த நோர்வேத் தமிழ்ச்சங்கத்திற்கும்
என் அன்புகலந்த நன்றிகள்.

என்றும் அன்புடன்
வசீகரன்
ஓசுலோ, நோர்வே



01.தமிழனுக்கு உயிர்
கொடுக்கும் தமிழன்



தமிழனுக்குத் தமிழனாம்
தமிழிலே கவிதையாம்
தமிழ்தாயின் பிறப்பாலே
பிறந்திட்ட தமிழனாம்!

வெளிநாடு சென்றிடினும்
தமிழ் மறவாத் தமிழனாம்

விமானவோட்டிகள்
ஆகாயத்தைத் தொடாதிருப்பினும்
விமானமின்றித் தமிழ் அம்பினால்
தமிழர் தம் இதயங்களை
தொட்டிடுவான் தமிழனாம்!

தனக்கென்றோர் பாணியிலே
தமிழினை தமிழ் உலகிற்கு
விதைத்திடுவான் தமிழனாம்!

தமிழுக்காய் உயிர் கொடுக்கும்
தமிழன்..
இவன் அல்லவோ
தமிழன்!

வரிகள் : வசீகரன்
அச்சில் : 11.03.93
நன்றி : தமிழன் (பத்திரிகை)

02.அன்புக் கரம்
நாடும் அகதிகள்


இறைவன் படைப்பால்
தமிழர் ஆனோம்
தமித்தாய் வயிற்றுப்
பாவி ஆனோம்

தாய் நாட்டில்
அகதி ஆனோம்
தவமது இருந்தோம்
பசியது தாங்கினோம்

ஆண்டுகள் பல ஓடியும்
ஆதரிப்பார் யாருமின்றி
அந்நியர் நாட்டில்
அகதிகள் ஆனோம்

அன்புக்கரம் நீட்டி
ஆதிரித்தான் அந்நியன்
அந்நியன் உணர்வுகள்
நமக்கு இல்லையே?

நம்மவர் உணர்வுகள்
உறங்குவது ஏனோ ?
அகதிக்கு அகதி நாம்
நம் நாட்டில் அகதியாம்!

எம்மவர் காத்திட
அன்புக்கரம் நீட்டுவோம்
வாரீர்..?

வரிகள் : வசீகரன்
அச்சில் : 12.03.93
நன்றி : தமிழன் (பத்திரிகை)


03.தமிழீழம்

தாய்நாடு அது
எங்கள் தமிழீழம்
எம் தமிழ்த் தாய்நாடு
தமிழீழம்!
உரக்கச் சொல்வோம்
இதை உலகுக்கும்
எடுத்துச் சொல்வோம்!

இங்கே யார் நாங்கள்...?
இங்கே யார் நாங்கள்...?
எட்டுத் திக்கிலுமிருந்து..
எழுகின்ற கேள்விக்கு..
என்ன விடை..?

இதை அறிந்து
சிலபேர்,
அறியாமல்
பலபேர்,
உனக்குள் இருக்கும்
உன் தாய்நாடு
எங்கே...?

இருபத்தியோரம் நூற்றாண்டின்
இயந்திர வாழ்வில்..!
சுவடுகள் பதிக்குமுன்
ஓருகணம் நில்லுங்கள்!

உனக்குத் தெரிந்த
உன் தாய்நாடு
என்று எதைச்
சொல்லிக்கொள்ளப் போகிறாய்..?

உன் எண்ணக்கரு
என்ன சொல்கிறது..?
என் எண்ணக்கரு
இதைத்தான்..
எண்ணிக் கொள்கிறது!

தாய்நாடு அது
எங்கள் தமிழீழம்
எம் தமிழ்த் தாய்நாடு
தமிழீழம்!
உரக்கச் சொல்வோம்
இதை உலகுக்கும்
எடுத்துச் சொல்வோம்!


வரிகள் : வசீகரன்
ஏட்டில்; : 28.10.98