Monday, August 20, 2007

பிறந்த நாளை



பல்லவி

பிறந்த நாளைக் கொண்டாடும் பிஞ்சு மழலைகளே
இந்த வீட்டின் சந்தோஷத்தை கொண்டு வந்தவர்களே
அம்மாவின் அன்புபிள்ளை அப்பாவின் நல்ல பிள்ளை
ஆண்டவனின் செல்லப் பிள்ளையாய்

நல்ல நல்ல பாட்டைக் கேட்டு
தன்னாலே ஆட்டம் போடுங்க
நல்லாய் படிச்சு பட்டம் முடிச்சு
உலகை நீங்கள் வெல்லுங்க

சரணம்-1

தரணியெங்கும் சென்று நீயும்
தமிழைப் பரப்பிட வேண்டும்
நெஞ்சை நிமிர்த்தி நின்று நீயும்
தமிழில் கதைத்திட வேண்டும்

உன்தன் மூச்சுக் காற்றில்கூட
புலமை தெரிந்திட வேண்டும்
அன்பின் கதவை திறந்து வைத்து
நட்புகள் வளர்த்திட வேண்டும்

அன்னை தந்தை சொல்லும் வார்த்தை
வாழ்வில் காட்டிட வேண்டும்
நல்ல நல்ல பிள்ளையாய்
நாடு போற்றும் வீரணாய்
அன்னை தந்தை பெயரைக்
காக்க வேண்டும்

சரணம்-2

சின்னச் சின்ன குறும்புகள் செய்து
வாழ்வினை ருசித்திட வேண்டும்
சொந்தம் பந்தம் எல்லோரும் உன்னை
அள்ளி அணைத்திட வேண்டும்

இமயம் கூட உயரம் இல்லை
உன் நெஞ்சில் துணிவிருந்தால்
வானம் கூட வசப்படுமே
உன் வாழ்வில் பணிவிருந்தால்

இதயம் திறந்து தமிழன் புகழை
நீயும் இசைத்திட வேண்டும்
நல்ல நல்ல பிள்ளையாய்
நாடு போற்றும் வீரணாய்
அச்சமின்றி உலகை
ஆள வேண்டும்.

பாடல்: வசீகரன்
இசை: வி.எஸ்.உதயா
குரல்: சாம்.பி.கீர்த்தன்
எண்: 07
ஏட்டில்:

இசைத்தொகுப்பு: காதல் மொழி

Monday, August 06, 2007

கண்ணீரில் குளிக்கின்ற



பல்லவி

கண்ணீரில் குளிக்கின்ற தேசம்-கடல்
தண்ணீரில் மிதந்தது சோகம்
அலை கொண்டு வந்த கடல்-மனித
தலை கொண்டு போனதே
இனம் மதம் மொழி கடந்து-எங்கள்
தேசம் சுமந்திடும் சோகமடா!

குழு: தேசம் தேசம் எங்கும் சோகம் சோகம்

சரணம் 1

போரின் நாக்குகள் தீண்டிய தேசத்தை
சுனாமி அலைகள் கிழித்ததே
வாழ்வின் ஆசைகள் துளிர்த்திட்ட மக்களை
வாழ்வளித்த கடலே அழித்ததே
ஆர்ப்பரித்த கடலே ஆள் பறித்தாயே
கரையில் நின்று எம்மையே கலங்க வைத்தாயே(2)
விழியில் தீமூட்டி அழுகின்றோம் அழுகின்றோம்
பிணவாடைக் கடலே கேட்கிறதா...?
ஓலம் கேட்கிறதா...?

சரணம் 2

அன்னையர் ஆடவர் பால் மணப் பிஞ்சுகளே
சீறிவந்த பேரலையே கொண்டு சென்றாய்
வீடுகள் போனதே கால்நடைகள் போனதே
தேசமே சோகமாய் ஆனதே
ரணங்களால் பிழிந்த எங்கள் இதயத்தையே
பிணங்களாய் குவித்து வைத்த கடலலையே
விழியில் தீமூட்டி அழுகின்றோம் அழுகின்றோம்
பிணவாடைக் கடலே கேட்கிறதா...?
ஓலம் கேட்கிறதா...?

நிறைவுப் பல்லவி

கண்ணீரும் கவலையும் வேண்டாம்
தண்ணீரில் இனிப்பயம் வேண்டாம்
தென்றலும் புயலுமே நிறைந்ததே வாழ்க்கையே
இயற்கையின் எல்லையை புரிந்திடு மனிதனே!
இனம் மதம் மொழி கடந்து- எங்கள்
தேசம் சுமந்திடும் துயர் துடைப்போம்

பாடல்: வசீகரன்
குரல்: கிருஷ்ணராஐ; சாம்.பி.கீர்த்தன், காஞ்சனா, பிரியங்கா
இசை: வி.எஸ்.உதயா
எண்: 06
ஏட்டில்:10.01.2005

இசைத்தொகுப்பு: காதல் மொழி