Monday, November 26, 2007

தமிழன் தமிழன் ஒருவன்



பல்லவி
தமிழன் தமிழன் ஒருவன்
தங்கத் தமிழன் ஒருவன்-எங்கள்
தலைவன் தலைவன் மறவன்
தமிழர் படைத்த பிரமன்- அண்ணன்
பிரபா பிரபா பிரபாகரன்
பிரபா பிரபா பிரபாகரன்

சரணம் 1
தமிழ்த்தாய் கண்ட கனவுஇவன்-அந்தக்
கனவோடு முளைத்த நனவுஇவன்
அன்னை தமிழால் சிகரமிவன்-எங்கள்
அன்பை மதிக்கின்ற தலைவன்இவன்
பகலில் அண்ணன் சூரியனே
இரவில் அண்ணன் சந்திரனே

சரணம் 2
பார்வையிலே தமிழ்ப்பூமியிருக்கும்
பண்டார வன்னியனின் ஆசியிருக்கும்
பாயும் விழிகளிலே தீயிருக்கும்
படை விரட்டும் திறன் நெஞ்சிலிருக்கும்
பகலில் அண்ணன் சூரியனே
இரவில் அண்ணன் சந்திரனே

சரணம் 3
நாட்டை நம்மை நேசிப்பவன்
தமிழ்விடுதலையை என்றும் யாசிப்பவன்
போரிலே செந்தமிழைப் பேசுபவன்- அவன்
போதனையில் புத்தனையே மிஞ்சுகின்றவன்
பகலில் அண்ணன் சூரியனே
இரவில் அண்ணன் சந்திரனே

பாடல்: தமிழன்(நோர்வே)
குரல்: திருமலைச்சந்திரன்
இசை: விமலன்

Monday, August 20, 2007

பிறந்த நாளை



பல்லவி

பிறந்த நாளைக் கொண்டாடும் பிஞ்சு மழலைகளே
இந்த வீட்டின் சந்தோஷத்தை கொண்டு வந்தவர்களே
அம்மாவின் அன்புபிள்ளை அப்பாவின் நல்ல பிள்ளை
ஆண்டவனின் செல்லப் பிள்ளையாய்

நல்ல நல்ல பாட்டைக் கேட்டு
தன்னாலே ஆட்டம் போடுங்க
நல்லாய் படிச்சு பட்டம் முடிச்சு
உலகை நீங்கள் வெல்லுங்க

சரணம்-1

தரணியெங்கும் சென்று நீயும்
தமிழைப் பரப்பிட வேண்டும்
நெஞ்சை நிமிர்த்தி நின்று நீயும்
தமிழில் கதைத்திட வேண்டும்

உன்தன் மூச்சுக் காற்றில்கூட
புலமை தெரிந்திட வேண்டும்
அன்பின் கதவை திறந்து வைத்து
நட்புகள் வளர்த்திட வேண்டும்

அன்னை தந்தை சொல்லும் வார்த்தை
வாழ்வில் காட்டிட வேண்டும்
நல்ல நல்ல பிள்ளையாய்
நாடு போற்றும் வீரணாய்
அன்னை தந்தை பெயரைக்
காக்க வேண்டும்

சரணம்-2

சின்னச் சின்ன குறும்புகள் செய்து
வாழ்வினை ருசித்திட வேண்டும்
சொந்தம் பந்தம் எல்லோரும் உன்னை
அள்ளி அணைத்திட வேண்டும்

இமயம் கூட உயரம் இல்லை
உன் நெஞ்சில் துணிவிருந்தால்
வானம் கூட வசப்படுமே
உன் வாழ்வில் பணிவிருந்தால்

இதயம் திறந்து தமிழன் புகழை
நீயும் இசைத்திட வேண்டும்
நல்ல நல்ல பிள்ளையாய்
நாடு போற்றும் வீரணாய்
அச்சமின்றி உலகை
ஆள வேண்டும்.

பாடல்: வசீகரன்
இசை: வி.எஸ்.உதயா
குரல்: சாம்.பி.கீர்த்தன்
எண்: 07
ஏட்டில்:

இசைத்தொகுப்பு: காதல் மொழி

Monday, August 06, 2007

கண்ணீரில் குளிக்கின்ற



பல்லவி

கண்ணீரில் குளிக்கின்ற தேசம்-கடல்
தண்ணீரில் மிதந்தது சோகம்
அலை கொண்டு வந்த கடல்-மனித
தலை கொண்டு போனதே
இனம் மதம் மொழி கடந்து-எங்கள்
தேசம் சுமந்திடும் சோகமடா!

குழு: தேசம் தேசம் எங்கும் சோகம் சோகம்

சரணம் 1

போரின் நாக்குகள் தீண்டிய தேசத்தை
சுனாமி அலைகள் கிழித்ததே
வாழ்வின் ஆசைகள் துளிர்த்திட்ட மக்களை
வாழ்வளித்த கடலே அழித்ததே
ஆர்ப்பரித்த கடலே ஆள் பறித்தாயே
கரையில் நின்று எம்மையே கலங்க வைத்தாயே(2)
விழியில் தீமூட்டி அழுகின்றோம் அழுகின்றோம்
பிணவாடைக் கடலே கேட்கிறதா...?
ஓலம் கேட்கிறதா...?

சரணம் 2

அன்னையர் ஆடவர் பால் மணப் பிஞ்சுகளே
சீறிவந்த பேரலையே கொண்டு சென்றாய்
வீடுகள் போனதே கால்நடைகள் போனதே
தேசமே சோகமாய் ஆனதே
ரணங்களால் பிழிந்த எங்கள் இதயத்தையே
பிணங்களாய் குவித்து வைத்த கடலலையே
விழியில் தீமூட்டி அழுகின்றோம் அழுகின்றோம்
பிணவாடைக் கடலே கேட்கிறதா...?
ஓலம் கேட்கிறதா...?

நிறைவுப் பல்லவி

கண்ணீரும் கவலையும் வேண்டாம்
தண்ணீரில் இனிப்பயம் வேண்டாம்
தென்றலும் புயலுமே நிறைந்ததே வாழ்க்கையே
இயற்கையின் எல்லையை புரிந்திடு மனிதனே!
இனம் மதம் மொழி கடந்து- எங்கள்
தேசம் சுமந்திடும் துயர் துடைப்போம்

பாடல்: வசீகரன்
குரல்: கிருஷ்ணராஐ; சாம்.பி.கீர்த்தன், காஞ்சனா, பிரியங்கா
இசை: வி.எஸ்.உதயா
எண்: 06
ஏட்டில்:10.01.2005

இசைத்தொகுப்பு: காதல் மொழி

Monday, July 30, 2007

ஏஐன்சிக்காரன்



பல்லவி

ஏஐன்சிக்காரன் ஏமாத்திட்டான்- என்
கதிர்காம முருகன் காப்பாத்திட்டான்
அப்பாவின் காசு காற்றோடு போச்சு
அம்மாவின் தாலி அடகுக்கு போச்சு

வெளிநாடு போக ஆசைப்பட்டேன்
அதனால தானே அவதிப்பட்டேன்(2)

சரணம் 1

வேர்வை சிந்தி வேலை செய்து சீட்டுக்கட்டி
சேர்த்து வைத்த காசு - எங்களோட காசு...
லண்டன் யேர்மன் சுவிஸ் பிரான்சில் பனிக்குளிரில்
வேலை செய்த காசு - அண்ணனோட காசு

சுத்திப் போட்டான் ஐயோ சுத்திப் போட்டான்
நடுத் தெருவில நிக்கறேனே முருகா
அதிகாரமா ஒய்யாரமா..
வெளிநாட்டு கார்ல போறான் முருகா

கனடாவில் குடியேற ஆசைப்பட்டேன்
கதிர்காமம் வந்துப்புட்டேன்
ஒடபெல்லாம் நகைபோட ஆசைப்பட்டேன்
ஒட்டாண்டி ஆகிப்புட்டேன்

சரணம் 2

கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு கம்பீரமா
உலா வர்ரான் பாரு - கொடுமைய பாரு
கந்தல் துணி கட்டி நிற்கும் என் நிலைய
கேக்கிறது யாரு கந்தா கூறு

புத்தி கெட்டு சக்தி கெட்டு
நித்தமும் நான் வாடுறேனே குமரா...
உன் பார்வை பட்டு தட்டு கெட்ட
என் பித்தம் என்று தெளியுமோ குமரா...

பழனி ஏறி மொட்டை போட
ஆசைப்பட்டேன் ஏறாம போட்டுக்கிட்டேன்
தங்கவேல் உனக்கு வைக்க நேந்துகிட்டேன்
நொந்து நூலகிப்புட்டேன்.

பாடல்: வசீகரன்
குரல்: வி.எஸ்.உதயா
இசை: வி.எஸ்.உதயா
எண்: 05
ஏட்டில்:

இசைத்தொகுப்பு: காதல் மொழி

Monday, July 23, 2007

பேசு காதல் மொழி




பல்லவி

பேசு பேசு பேசு
நீ காதல் மொழியை பேசு
காலையிலும் தினம் மாலையிலும்
நீ காதல் மொழியைப் பேசு (2)

மலர்களின் மேலே மனம் மோதும்
மௌனம் கூட கவிபாடும்

பேசு பேசு பேசு நீ காதல் மொழியை பேசு
இதயக் காதல் மொழியில் கொஞ்சம்
கொஞ்சும் இசை கலந்தால்
நெஞ்சம் குளிருமடி உலகம் இனிக்குமடி

சரணம் 1

காதல் மொழியைப் பேசும் இதயம்
கோடி முறை பிறக்கும்
உள்ளத்தின் கூட்டில் உலகத்தை சேர்த்து
புத்தம் புது உயிர் வளர்க்கும்(2)

எழுத்தின் வடிவம் உணரும் முன்பே
எழுந்தது காதல் மொழி

இதயம் பேசும் மொழி
புது உதயம் காதல் மொழி(2)
இனிய காதல் மொழி புதிய காதல் மொழி
பேசிடு காதல் மொழி

சரணம் 2

வளர் பிறையாவதும் தேய் பிறையாவதும்
காதலிலே வழக்கம்
தேய்வதை வென்று வளர்வதைக் கண்டு
இணைப்பது காதல் மொழி

உயிரில் பேசும் காதல் மொழிதான்
உலகை இணைத்திடுமே(2)

இதயம் பேசும் மொழி
புது உதயம் காதல் மொழி(2)
இனிய காதல் மொழி புதிய காதல் மொழி
பேசிடு காதல் மொழி

பாடல்: வசீகரன்
குரல்: உன்னிக்கிருஷ்ணன்
இசை: வி.எஸ்.உதயா
எண்: 04
ஏட்டில்:

இசைத்தொகுப்பு: காதல் மொழி

Monday, July 16, 2007

பெண்கள் இல்லாத



பல்லவி
பெண்கள் இல்லாத உலகத்தில்
வாழ பேயும் விரும்பாதே
Girlfriend இல்லாத boysஇன்
வாழ்க்கை என்றும் இனிக்காதே
Tim Hortenபோகாத ஆண்களுக்கு
ஒரு உற்சாகம் பிறக்காதே
அட நம்பர் கொடுக்காமல்
நீங்கள் போனால்
Friendship வளராதே

சரணம் 1
E-மெயில் அனுப்பி இன்சல்ட் செய்து
disturbe disturbe செய்வோமே
sms செய்து உங்களை எழுப்பி
Dating Dating கேட்போமே

பாரப்பா பழனியப்பா வெளிநாட்டு girls பாருங்கப்பா
ஊரெல்லாம் பெரிசப்பா போடுகிற dress தான் சிறுசப்பா

yahoo chat இலே searching செய்யாத
handsome handsome boys நாங்கள் தானே
Girlsஐ கண்டாலே wallet open பண்ணாத
Good boys Good boys என்றும் நாங்கள் தானே

கார்மோன் துடிப்பில் புது வைரஸ் கிருமியாய் நுழைவோம்
டியிட்டல் ஒலியாய் உங்கள் இதய அறைகளில் மலர்வோம்
துள்ளாதே மின்னாதே நீங்கள்
இல்லையென்றால் கோபிக்காது தாஐமகால்

சரணம் 2
புத்தம் புதுக்காரில் Build up செய்து கொண்டு
Round up Round up செய்வோமே
மைக்கல் யக்சன் போல modern styleபண்ணி
Kissing Kissing கேட்போமே

பாரப்பா பழனியப்பா வெளிநாட்டு boysஅ பாருங்கப்பா
காதெல்லாம் கடுக்கனப்பா விடுகிற ரீலுதான் நீளமப்பா

உஙகள் mobile phoneலே மாட்டிக் கொள்ளாத
Interligent girls நாங்கள் தானே
webcam வானிலே cat walking செய்யாத
Lovely Lovely பூக்கள் நாங்கள் தானே

3D aniமேசனாய் உங்கள் அழகுகண்களில் ஒளிர்வோம்
அகிலா கிரேனில் வந்து உங்கள் heart beat இலே அமர்வோம்
கொஞ்சாதே கெஞ்சாதே நீங்கள் இல்லையென்றால்
வற்றிடாது நைனிடால்...

பாடல்: வசீகரன்
குரல்: யக்சன் பொஸ்கோ(லண்டன்) , மேகா(இந்தியா)
இசை: வி.எஸ்.உதயா
எண்:03
ஏட்டில்:

இசைத்தொகுப்பு: காதல் மொழி

Tuesday, July 10, 2007

உயிராய் என்னை



பல்லவி

உயிராய் என்னை வளர்த்தவள் நீ
கருவில் என்னை சுமந்தவள் நீ
நீ தந்த உயிரில் பாடுகின்றேன் -உன்
கனவுகள் சுமந்தே வாழுகின்றேன்

பூமிக்கு என்னை அறிமுகம் செய்தாய்
பூவாய்த் தானனே எனை வளர்த்தாய்
அம்மா...அம்மா...அம்மா...அம்மா...

இடையிசை ராப் பாடல் குரல்:
சையின் சுதாஸ் (நோர்வே)

சரணம் 1

கடவுளை கண்முன் பார்த்தது இல்லை
உன் வடிவில் நான் பார்த்தேன்
உண்மையை நேராய் உணர்ந்தது இல்லை
உன் விழியில் நான் பார்த்தேன்

உயிராய் ஒளியாய் இருப்பவள் நீ
சுமைகளை இமைகளில் சுமப்பவள் நீ
ஆயிரம் உறவின் வாசல் நீ
அன்புக்கு இணையாய் எதைக் கொடுப்பேன்

நிலவா நினைவா நீ கை காட்டும் திசைதான்
உயிரா உணர்வா நீ பண்பாடும் இசைதான்

உயிராய் என்னை வளர்த்தவள் நீ
நீ தந்த உயிரில் பாடுகின்றேன்
கருவில் என்னை சுமந்தவள் நீ - உன்
கனவுகள் சுமந்தே வாழுகின்றேன்.

பாடல்: வசீகரன்
குரல்: சாம்.பி.கீர்த்தன், சையின் சுதாஸ்
இசை: வி.எஸ்.உதயா
எண்: 02
ஏட்டில்:

இசைத்தொகுப்பு: காதல்மொழி

Tuesday, July 03, 2007

காதல் சொல்ல காதல்



பல்லவி

பெண்:
காதல் சொல்ல காதல் சொல்ல
தயக்கமும் தேவையா
மோதல் செய்து மோதல் செய்து
கைதுசெய்த தோழனே

நெஞ்சத்திலே சினேகமாய்
காதலைச் சுமக்கிறாய்-ஏன்
மௌனத்தினால் என்னையே
பார்வையால் வதைக்கிறாய்

அழகான நண்பனே!
காதல் செய்க நண்பனே!
காதல் செய்க நண்பனே!
காதல் செய்க நண்பனே!

சரணம் 1

ஆண்:
உன் விழிகள் வீசும் வலைகள் கொண்டு
அள்ளிக் கொள்ள நினைக்கிறாய்
கொஞ்சம் கொஞ்சமாய் காதல் பேசி
என்னை வெல்லத் துடிக்கிறாய்

பார்வையால் படர்கிறாய்-உன்
வார்த்தையால் வளைக்கிறாய்
நட்பின் ஈரம் காயும் முன்பே
காதல் தோன்ற வேண்டுமா ?

சரணம் 2

பெண்:
காதல் நுழைந்த இதயம் தன்னை
சிறை வைத்து ரசிக்கிறாய்- உன்
கண்களின் ஓரம் கசியும் காதலை
என்ன செய்யப் போகிறாய்
என்ன செய்யப் போகிறாய் ?

இதயத் திருடனே காதல் பொய்யனே
நட்பெனும் திரையை உடைப்பாயா- உன்
உயிரின் ஒருபாதி நான் தானென்று
வெள்ளை அறிக்கை தருவாயர் ?

ஆண்:
இரும்பை உருக்கும் பார்வைக்காரி
நீதான் நீதான் வன்முறைக்காரி
காதல் குற்றம் ஒப்புக் கொண்டேன்
ஆயுள் தண்டனை தந்துவிடு...

பாடல்: வசீகரன்
குரல்: மதுபாலகிருஷ்ணன், காஷ்மீரா
இசை: வி.எஸ்.உதயா
எண்: 01
ஏட்டில்:

இசைத்தொகுப்பு: காதல் மொழி

Sunday, June 24, 2007

யாழ்தேவியில் காதல்



பல்லவி

யாழ்தேவியில் நாங்கள் காதல் செய்தால்
யாழ் மீட்டுமே ரயில் தண்டவாளம்
யாழ்மண்ணிலே நாங்கள் கால்பதிக்கவே
வாழ்த்துரைக்குமே ரயில் தண்டவாளம்
எங்கடை மக்களுக்கு - ஓர்
உறவுப் பாலம் நீ - சிறு
சங்கடம் இல்லாமல்
தேசிய சினேகம் வளர்த்திருப்பாய்

சரணம் 1

கோட்டையிலே கூச் சத்தம்
போகுமிடமெல்லாம் புதுச்சந்தம்
யாழ்நகர் சென்று சேரும் வரை
ஊர்களை இணைக்கும் பாலம் நீ

றாகமத்தைத் தாண்ட சேற்றெருமை துள்ளும்
அலரிமலர்த் தோட்டம் அழகழகாய் ஆடும்
பள்ளித் தாமரைகள் ஆனந்த நடை பயிலும்
போதிமரப் புத்தன் கோயில்களைத் தாண்டும்

பெட்டி விட்டு பெட்டி தாவலாம் நண்பனே
சின்னச் சின்னக் காதல் பார்க்கலாம் நண்பியே
ஐன்னல் ஓரம் ஓடும் வயல்கள் சந்தோசம்(2) - அதில்
பச்சைப் பயிர்கள் ஆடும் நடனம் சந்தோசம்(2)

சரணம் 2

வன்னியைத் தொட்ட ரயிலே நீ
செம்மண் வாசனை நுகர்ந்தாயா
தென்னை தொட்ட தென்றலென- நம்
உள்ளம் குதிப்பதை உணாந்தாயா

வேலிகளில் எல்லாம் தலையசைக்கும் கிளுவை
வேப்ப மரக்காற்றும் புதுக்கவிதையாக இனிக்கும்
நாள் முழுக்க உழைக்கும் கமக்காரர் வேகம்
யாழ்தேவி உனக்குப் போட்டியாக வருமோ?

பெட்டி விட்டு பெட்டி தாவலாம் நண்பனே
சின்னச் சின்னக் காதல் பார்க்கலாம் நண்பியே
பனையில் ஆடும் காவோலை சங்கீதம் சங்கீதம்
யாழ்ப்பாணம் வந்ததைச் சொல்லும் பனைவாசம் சந்தோசம்

பாடல் : வசீகரன்
குரல் : சாம்.பி.கீர்த்தன்
இசை : வி.எஸ்.உதயா
எண் : 08
ஏட்டில் : 29.04.2003

காதல் கடிதம்

Monday, June 18, 2007

ஓரு நதியின் பெயரோடு



பல்லவி

ஓரு நதியின் பெயரோடு பிறந்தவளே
பெரு நதியாய் என்மேல் பாய்ந்தவளே
உன் உயிராலே என்னைத் திறந்தவளே
என் உயிரோடு வந்து கலந்தவளே.

என் விழியோரம் தினம்தினம் மிதக்கின்றாய்
ஏதேதோ புதுப்புது ரகசியம் கதைக்கின்றாய்
காதலா...காதலா... காதலா...
காதலா...காதலா...காதலா...

சரணம் - 1

கனவில் கிளித்தட்டு ஆடிடும் வேளை
புதுமெட்டு போடுகிறாய்
மழையெனும் இசைதனில் மூழ்கிடும் வேளை
தீயினை மூட்டுகிறாய்

தாலாட்டும் மடிமீது இடம் கேட்கிறேன்- நீ
பாராட்டும் மொழிமீது குளிர் காய்கிறேன்
தினம் தோறும் கவி பூக்கும்
இசைவந்து தேன் வார்க்கும்!
நீயின்றி என் வாழ்வு இல்லையே!

சரணம்- 2

தாமரைக் குளத்தில் சூரியக் கதிராய்
தினம் தினம் குதிக்கின்றாய்
ஆலமரத்தில் பேசிடும் கிளியாய்
செவிகளில் நிறைகின்றாய்

உன் பார்வை வரம் கேட்கும்
ஏழை யாசகன்
உன் பேரை தினம் பாடும்
நானோர் வாசகன்
நறுமுகையே குறுநிலவே
தரு நிழலே குளிர் மழையே
நீயின்றி என் வாழ்வு இல்லையே.

பாடல் : வசீகரன்
குரல் : விதுபிரதாபன்
இசை : வி.எஸ்.உதயா
எண் : 07
ஏட்டில் : 07.11.2001
காதல் கடிதம்

எழுது என் அன்பே



பல்லவி

எழுது எழுது என் அன்பே-ஒரு
கடிதம் எழுது என் அன்பே
உன்னை நான் நேசிக்கிறேன்
அதனால் தானே சுவாசிக்கிறேன்

சரணம் 1

பனியில் உறையும் உன் விழிகள்-ஒரு
நொடியில் உருகிடும் எனைப் பார்த்து
பாசம் நேசம் தருவேனே- உன்
பாதை எங்கும் வருவேனே

பார்த்த விழி பூத்திருப்பாய்-உன்
பார்வையாக வருவேனே
அலையாக நான் வந்து அணைப்பேனே-அந்தி
மழையாக உன்னை வந்து நனைப்பேனே

சரணம் 2

மனசில் பூக்கும் உன் பூக்கள்- என்
சேலை சேர்ந்துவிடும் வேளைவரும்
பூவின் வாசம் தருவவேனே - உன்
மேனி எங்கும் சிலிர்ப்பேனே - அங்கு

உனக்காக நான் வந்து கவிபாட- இங்கு
இருளோடு நீவந்து முகம்காட்டு-
உயிரோடும் உடலோடும் நான்தானே- என்
உறவாலே உனைவந்து தாலாட்டுவேன்

காதல் வாழ்க காதல் வாழ்க
பூமி சுற்றும்வரை காற்று உள்ளவரை
காதல் வாழ்க காதல் வாழ்க

பாடல் : வசீகரன்
குரல் : அம்பிலி
இசை : வி.எஸ்.உதயா
எண் : 06
ஏட்டில் :
காதல் கடிதம்

பனங்காய்ப் பணியாரமே



தொகையரா

வல்லைவெளி காற்றடிக்கும்
திரளி மீன் துள்ளியெழும்
ஒடியல் கூழ் குடித்தால்
மனமெங்கும் விண்கூவும்

பல்லவி

பனங்காய்ப் பணியாரமே பனங்காய்ப் பணியாரமே
பச்சைக் கொழுந்து வெத்திலையே
உன் பார்வை கொஞ்சம் பத்தலையே
பனையோலைப் பாய் விரிச்சு
படுத்துறங்கும் மணியக்கா மணியக்கா
கமுகமரப் பாக்குத் தந்து கவுக்கிறது என்னக்கா

சரணம் 1

காங்கேசன்துறை சுண்ணாம்பை கொஞ்சம்
தடவித் தடவிகொடடி
உன் கையால என் வாய் சிவக்க
வெற்றிலை மடிச்சுக் கொடடி

கொக்கார மூலைக்குள்ளே கொக்கு வந்து நிக்குது
கொக்கரக்கோ சேவல் என் வீட்டுக் கூரையில் ஏறுது.

கீரிமலை பனங்கள்ளும் களுத்துறைக் கருவாடும்
ஒன்றாகச் சேர்த்தடிச்சா கிக்குத்தான் கிக்குத்தான்

நான் கோவிற்கடவை ஆளு! நீ
சேலை கட்டிய தேரு !

சரணம் 2

மட்டு நகர் தயிர் எடுத்து
வளைஞ்சி நெளிஞ்சி வாடி
என் உயிரை பிடித்து உறைய வைத்து
உறியில் வைத்துப் போடி

மண்பானைத் தயிர் கனக்கம் என் நெஞ்சு துடிக்கும்
சும்மாடாய் நான் வரவா? சும்மாடாய் நான் வரவா?

கண்டிக் குளிருலதான்
கைகால் விறைக்குதடி
கொஞ்சம் சூடேத்த
நெஞ்சு நினைக்குதடி

முல்லைத்தீவு போவோம்
முயலு இரண்டு பிடிப்போம்
நீ மூச்சிழுக்கும் நேரம்
நான் பேச்சிழந்து போவேன்

பாடல் : வசீகரன்
குரல் : கிருஷ்ணராஐ; குழுவினர்
இசை : வி.எஸ்.உதயா
எண் :
ஏட்டில் :
காதல் கடிதம்

உயிருக்குள் ஊர்சுற்றும்



பல்லவி

உயிருக்குள் ஊர்சுற்றும்
உறவுப் பூமழையே- என்
உடலுக்குள் உயிர்ஊட்டும்
இன்பத் தேன்மழையே
மண்ணுக்குள் வீசும்
தென்றல்க் காற்றாய்- என்
மனசுக்குள் வந்தாய்
இசைமழையே

சரணம் 1

தூலிப்பான் பூவினிலே பூத்தவளா?
நீ யாரும் படிக்காத புத்தகமா?
மழைத்துளியாய் வந்து நீ வீழ்கையிலே
வெள்ளிக் கொலுசின் ஓசை கேட்குதடி
தேசம் விட்டு தேசம் வந்த நாயகியே
ஏனை தீண்டும் இன்பத் தேன்மொழியே
தினம் பாக்கள் சொல்லிப் பாடப்போகிறேன்
என் வாழ்க்கை உன்னை வாழப்போகிறேன்.

சரணம் 2

வானத்தில் வந்துதித்த தேவதையா?
நீருக்குள் மூழ்காத தாமரையா?
மழைவெப்பம் தந்து நீ போகையிலே
என் மனசுக்குள் வசந்தம் தோன்றுதடி
தேகம் மீது மோதும் தாவணியே
எனைத் தொட்டு எழுதும் மைத்துளியே
தினம் பாக்கள் சொல்லிப் பாடப்போகிறேன்
என் வாழ்க்கை உன்னை வாழப்போகிறேன்.

பாடல் : வசீகரன்
குரல் : உன்னிக்கிருஷ்ணன்
இசை : வி.எஸ்.உதயா
எண் : 04
ஏட்டில் :
காதல் கடிதம்

ஈழப் பெண்ணே



பல்லவி

ஈழப் பெண்ணே ஈழப் பெண்ணே
சின்னக் கவிபாடடி
உன் கண்ணுக்குள்ளே ஏன் ஓவியத்தை
வரைந்தவர் யார் சொல்லடி

உன் நினைவுகள் என்னை உருக்கும்
பல பட்டாம் பூச்சிகள் பறக்கும்
ஆயிரம் வண்ணங்கள் சிரிக்கும்
என் வாசலில் வானவில் உதிக்கும்
தினம் தினம் மின்மினி
பறக்கின்றதே

சரணம் 1

நிலவின் மடியில் உலகம் மயங்கும்
அவசரமாய் காலை விடியும்
மஞ்சள் பூக்கள் ரோஐh கூட்டம்
அழகழகாய் நம்மை வாழ்த்தும்

மின்னல் மேகம் வந்து சால்வை போர்த்தும் போது
மழைத்துளி எட்டிப் பார்க்கும்
மஞ்சள் வெயில் வந்து மண்ணைப் போர்த்தும் போது
மனசெங்கும் பரவசமே...

கொள்ளை கொள்ளை இன்பம்
எல்லை இல்லா வானம்
விண்ணுக்கொரு பாலம் செய்வோம்
பூப்பறிப்போம்

சரணம் 2

மூன்றே மாதம் மூன்றே மாதம்
கோடைகாலம் பூத்து விரியும்
மஞ்சள் பூக்கள் மஞ்சள் பூக்கள்
இளம் கூந்தல் தேடித் திரியும்

பருவப் பூக்கள் சேலை கட்டும் போது
பனித்துளி எட்டிப் பார்க்கும்
ஆக்கப் பிறிக் கடற்க்கரையில்
அலைகள் மோதும் மோதும்

சிலைகள் கால் நனைக்கும்
சிறைகள் தாண்டிப் போவோம்
சிறகுகள் இரண்டு கேட்போம்
நீயும் நானும் காதல் செய்து
வேர்த்திருப்போம்.

பாடல் : வசீகரன்
குரல் : மதுபாலகிருஷ்ணன்
இசை : வி.எஸ்.உதயா
எண் : 03
ஏட்டில் :
காதல் கடிதம்

யாரும் எழுதாத பாடல்



பல்லவி

ஆண்: யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை
என் வாழ்வு இருக்கும் போதே
எழுதி உயரத்தானே ஆசை
உனக்காக எழுதும் பாடல் எந்த மெட்டிலும்
இணைய வேண்டும்
இசைத் தாளத்தில் மூழ்காமல் உயிர்வரிகளாய்
இருக்க வேண்டும்

பெண்: யாரும் எழுதாத பாடல் கேட்கத்தானே ஆசை
என் வாழ்வு மலரும் போதே
அதைக் கேட்கத்தானே ஆசை

சரணம் 1

ஆண்: கண்ணுக்குள்ளே நீ எங்கே என்று
என் கவிதைகளும் உளவு பார்த்ததோ
நெஞ்சுக்குள்ளே நீ எங்கே என்று
என் கனவுகளும் கேட்டு நின்றதோ

பெண்: கண்ணுக்குள்ளே கலகம் செய்தாய்
என் இதயத்தின் புதுத் திருடா
கவலைகள் ஏனடா
காதல் யுத்தம் செய்யப்போகிறேன்
காத்திருந்து வாழப் போகிறேன்

ஆண்: யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை
என் வாழ்வு இருக்கும் போதே
எழுதி உயரத்தானே ஆசை

சரணம் 2

பெண்: என் ஐன்னல் ஓரம் ஒரு பார்வை பார்க்கிறாய்
என் மூச்சைக்கூட இரவல் கேட்கிறாய்
என் பேச்சைக்கூட பதிவு செய்கிறாய்
என் கால்த் தடத்தை களவு செய்கிறாய்

ஆண்: புதியதோர் உலகம் வேண்டும்
அங்கு எனை வெல்ல நீ வேண்டும்
காதலே வந்ததே
புதிய வாழ்வின் அர்;த்தம் சொன்னதே
மீண்டும் மீண்டும் பிறக்கச் சொன்னதே

பெண்: யாரும் எழுதாத பாடல் கேட்கத்தானே ஆசை
என் வாழ்வு மலரும் போதே
அதைக் கேட்கத்தானே ஆசை
எனக்காக எழுதும் பாடல் எந்த மெட்டிலும்
இணைய வேண்டும்
இசைத் தாளத்தில் மூழ்காமல் உயிர்வரிகளாய்
இருக்க வேண்டும்

ஆண்: யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை
என் வாழ்வு இருக்கும் போதே
எழுதி உயரத்தானே ஆசை


பாடல் : வசீகரன்
குரல் : உன்னிமேனன், ஐPவரேகா
இசை : வி.எஸ்.உதயா
எண் : 02
காதல் கடிதம்

Thursday, April 26, 2007

எழுது எழுது



எழுது எழுது என் அன்பே - காதல் கடிதம்

பல்லவி

எழுது எழுது என் அன்பே-ஒரு
கடிதம் எழுது என் அன்பே
உன்னை நான் நேசிக்கிறேன்
அதனால் தானே சுவாசிக்கிறேன்

சரணம் 1

பனியில் உறையும் என் விழிகள்-ஒரு
நொடியில் உருகிடும் உனைப்பார்த்து
பாசம் நேசம் தருவாயே-என்பாதை
எங்கும் வருவாயே பார்த்த விழி பூத்திருந்தேன்-என்
பார்வை நீயேன் வரவில்லை ?
அலையாக நீ வந்து அணைப்பாயா-அந்தி
மழையாக என்னை வந்து நனைப்பாயா?

சரணம் 2

மனசில் பூக்கும் என் பூக்கள்- உன்
மாலை ஆகும் வேளை வரும்
பூவின் வாசம் தருவாயே - என்
மேனி எங்கும் சிலிர்ப்பாயே - இங்கு
எனக்காக நீ வந்து கவிபாடு- அங்கு
இருளோடு உனக்கென்ன விளையாட்டு-என்
உயிரோடும் உடலோடும் நீதானே- உன்
உறவாலே எனை வந்த தாலாட்டு

காதல் வாழ்க காதல் வாழ்க
பூமி சுற்றும்வரை காற்று உள்ளவரை
காதல் வாழ்க காதல் வாழ்க

பாடல் : வசீகரன்
குரல் : ஸ்ரீநிவாஸ்
இசை : வி.எஸ்.உதயா
எண் : 01
ஏட்டில் : 20.03.2000

காதல் கடிதம்

Wednesday, April 18, 2007

தமிழனுக்கு உயிர்

வணக்கம் நண்பர்களே!

உங்கள் வரவு நல்வரவாகட்டும். என் தமிழில் நடைபயில எனது இலக்கியப்பூங்கா.

எனது முதலாவது படைப்பான
இன்ரநெற் யுகமும் இருபத்தியோராம் நூற்றாண்டும்
நூலில் இருந்து கவிதைகள் இங்கே மலர்கின்றன. நான் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எழுதத் தொடங்கி இரண்டாயிரம் ஆண்டுவரை எழுதிய பல கவிதைகள் இங்கு இடம்பெற்றுள்ளன.
சிறிய வயதில் கவிதை மீது கொண்ட தீராத காதலால் என் தாயகம் சார்ந்து
எழுதிய என் உணர்வின் பதிவுகள் இவை. அவற்றில் சொற்பிழைகள் பொருட்பிழைகள் இருந்தால் என்னை மன்னித்து பொறுத்தருளுவீர்கள் என நம்புகின்றேன்.

என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பினை மிகவும் அழகாக வடிவமைத்து பதிப்பு செய்தளித்த மறவன்புலவு திரு.சச்சிதானந்தன் ஐயா அவர்களை நன்றியுடன் நினைவு கோருகின்றேன்.
அத்தோடு என் நூலுக்கு அணிந்துரை வழங்கிய இனிய மூத்த படைப்பாளிகள் உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன், கவிஞர் கந்தவனம் ஐயா, கவிஞர் வ.ஐ.ச.செயபாலன் மற்றும்
என் அன்புக்குரிய கவிஞர் சோதியா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

எனது இக் கவிநூலினை வெளியீடு செய்து வைத்த நோர்வேத் தமிழ்ச்சங்கத்திற்கும்
என் அன்புகலந்த நன்றிகள்.

என்றும் அன்புடன்
வசீகரன்
ஓசுலோ, நோர்வே



01.தமிழனுக்கு உயிர்
கொடுக்கும் தமிழன்



தமிழனுக்குத் தமிழனாம்
தமிழிலே கவிதையாம்
தமிழ்தாயின் பிறப்பாலே
பிறந்திட்ட தமிழனாம்!

வெளிநாடு சென்றிடினும்
தமிழ் மறவாத் தமிழனாம்

விமானவோட்டிகள்
ஆகாயத்தைத் தொடாதிருப்பினும்
விமானமின்றித் தமிழ் அம்பினால்
தமிழர் தம் இதயங்களை
தொட்டிடுவான் தமிழனாம்!

தனக்கென்றோர் பாணியிலே
தமிழினை தமிழ் உலகிற்கு
விதைத்திடுவான் தமிழனாம்!

தமிழுக்காய் உயிர் கொடுக்கும்
தமிழன்..
இவன் அல்லவோ
தமிழன்!

வரிகள் : வசீகரன்
அச்சில் : 11.03.93
நன்றி : தமிழன் (பத்திரிகை)

02.அன்புக் கரம்
நாடும் அகதிகள்


இறைவன் படைப்பால்
தமிழர் ஆனோம்
தமித்தாய் வயிற்றுப்
பாவி ஆனோம்

தாய் நாட்டில்
அகதி ஆனோம்
தவமது இருந்தோம்
பசியது தாங்கினோம்

ஆண்டுகள் பல ஓடியும்
ஆதரிப்பார் யாருமின்றி
அந்நியர் நாட்டில்
அகதிகள் ஆனோம்

அன்புக்கரம் நீட்டி
ஆதிரித்தான் அந்நியன்
அந்நியன் உணர்வுகள்
நமக்கு இல்லையே?

நம்மவர் உணர்வுகள்
உறங்குவது ஏனோ ?
அகதிக்கு அகதி நாம்
நம் நாட்டில் அகதியாம்!

எம்மவர் காத்திட
அன்புக்கரம் நீட்டுவோம்
வாரீர்..?

வரிகள் : வசீகரன்
அச்சில் : 12.03.93
நன்றி : தமிழன் (பத்திரிகை)


03.தமிழீழம்

தாய்நாடு அது
எங்கள் தமிழீழம்
எம் தமிழ்த் தாய்நாடு
தமிழீழம்!
உரக்கச் சொல்வோம்
இதை உலகுக்கும்
எடுத்துச் சொல்வோம்!

இங்கே யார் நாங்கள்...?
இங்கே யார் நாங்கள்...?
எட்டுத் திக்கிலுமிருந்து..
எழுகின்ற கேள்விக்கு..
என்ன விடை..?

இதை அறிந்து
சிலபேர்,
அறியாமல்
பலபேர்,
உனக்குள் இருக்கும்
உன் தாய்நாடு
எங்கே...?

இருபத்தியோரம் நூற்றாண்டின்
இயந்திர வாழ்வில்..!
சுவடுகள் பதிக்குமுன்
ஓருகணம் நில்லுங்கள்!

உனக்குத் தெரிந்த
உன் தாய்நாடு
என்று எதைச்
சொல்லிக்கொள்ளப் போகிறாய்..?

உன் எண்ணக்கரு
என்ன சொல்கிறது..?
என் எண்ணக்கரு
இதைத்தான்..
எண்ணிக் கொள்கிறது!

தாய்நாடு அது
எங்கள் தமிழீழம்
எம் தமிழ்த் தாய்நாடு
தமிழீழம்!
உரக்கச் சொல்வோம்
இதை உலகுக்கும்
எடுத்துச் சொல்வோம்!


வரிகள் : வசீகரன்
ஏட்டில்; : 28.10.98